Connect with us

Raj News Tamil

பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: ராகுல் காந்தி!

தேர்தல் 2024

பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: ராகுல் காந்தி!

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நேற்றுமாலை நடந்த பிரம்மாண்ட பிரச்சாரபொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

தமிழ்நாடு வருவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தமிழ்நாட்டை விரும்ப பல காரணங்கள் உள்ளன. மொழி, வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவை எனக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன.

விமான நிலையம், உள்கட்டமைப்பு என எதுவானாலும் அதானியிடம் கொடுத்து வருகிறார் பிரதமர் மோடி. மும்பை விமான நிலைய நிர்வாகம் தனியார் ஒருவரிடம் இருந்தது. அதைஅதானிக்கு மோடி பெற்றுத் தந்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எம்.பி. பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். எனது வீட்டையும் திரும்ப பெற்றுக்கொண்டனர். வீடு பறிக்கப்பட்டது குறித்து எனக்கு கவலையில்லை. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் மனதில் எனக்கு தனி இடம் உள்ளது. தமிழக மக்கள் எனக்காக அவர்களது வீட்டு கதவை திறந்து வைப்பார்கள்.

தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ளது குடும்ப ரீதியான உறவு. தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். தமிழர் நாகரிகம் தொன்மையானது. யாரை அங்கீகரிக்க வேண்டும் என்பதுஅவர்களுக்கு நன்கு தெரியும். உங்களுக்கென்று தனி வரலாறு உள்ளது.

மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு தமிழக மக்களின் குரல் சில கேள்விகளை கேட்கிறது. வரலாறு, மொழியை அவதூறாக பேசுகின்றனர். டெல்லி திரும்பியதும் ‘ஒரே நாடு, ஒரே மொழி’ எனவலியுறுத்துகின்றனர். மற்ற மொழிகளை அங்கீகரிக்க கூடாது என்பதற்கு இவர்கள் யார்? இங்கு வந்தால் தோசை பிடிக்கும் என கூறிவிட்டு இங்கிருந்து சென்றபின் தமிழக கலாச்சாரம், மொழியை அவதூறாக பேசுகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள், இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். ஜிஎஸ்டி வரி, பண மதிப்பு இழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது அண்ணன் மு.க.ஸ்டாலின். நான் இதுவரை அரசியல் தலைவர்களில் யாரையும் எனது மூத்த சகோதரர் என குறிப்பிட்டது இல்லை. அவர் பேசும்போது, தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு காணப்படும். 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படும். பட்டதாரிகள், பட்டய படிப்பு முடித்தவர்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் தொழில் பழகுநர் திட்டம் அரசு சார்பில் அமல்படுத்தப்படும்.

நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக மக்கள் முடிவுக்குவிட்டுவிடுவோம். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடினார்கள். அவர்களுடன் பேசினேன். குறைந்தபட்ச ஆதரவு விலை நிச்சயமாக வழங்குவோம். மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி ரூபாய் செல்வந்தர்களுக்கு கடன் விலக்கு அளித்தது. நாங்கள் வெற்றி பெற்றால் விவசாய கடன் தள்ளுபடி செய்வோம். பெண்கள் முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். அந்த குடும்பம் வறுமையில் இருந்து வெளியே வரும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்கள் ஊதியம் உயர்த்தப்படும். இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பு நீக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

தமிழர்களின் உரிமை, இந்திய மக்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம் அரசியல் ரீதியாக பாதுகாக்கப்படும். இன்று பல கல்வி நிலையங்களில் முக்கிய பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டு, அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தை இளைஞர்களுக்கு பரப்புகின்றனர். இந்தியா மக்களுக்கான நாடு. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்புக்கு சொந்தமானது அல்ல.

பாஜக அரசியல் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள தயாராக உள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை மோடிக்கு சொந்தமானது அல்ல. எதிர்வரும் தேர்தல் அரசியல் சட்டத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் இடையே நடைபெறும் போர். இந்தியா கூட்டணி இந்ததேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top