மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!

மாநிலங்களவையில் மகளிர் 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா இரவு (வியாழக்கிழமை) ஒருமனதாக நிறைவேறியது.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால் சட்டமாகும்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் புதன்கிழமை பதிவாகின.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா. சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முத்ரா திட்டத்தில் 68 சதவீத பயனாளிகள் பெண்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டு வசதி, எரிவாயு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

RELATED ARTICLES

Recent News