சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றன. இதனையொட்டி மாநாடு நடைபெறும் வளாகத்தில் 9 நாடுகளின் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. கொடிகளின் முன்பு நின்று சிறப்பு விருந்தினர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு :
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள்,
மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர், அதனையொட்டி மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையத்தில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் போலீசார் குவிப்பு :
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, கிண்டியில் இந்து நந்தம்பாக்கம் வரையில் வழிநெடுகிலும் 30 மீட்டர் இடைவெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னை வர்த்தக மையத்தை சுற்றிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
கிராமிய கலை நிகழ்ச்சிகள் :
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எல்.இ.டி.திரை :
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் வர்த்தக மையத்தில் ஆங்காங்கே எல்.இ.டி திரை திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
நினைவுப் பரிசு :
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னையை பற்றிய குறிப்பு, சென்னையின் முக்கிய இடங்கள், உணவுகள் தொடர்பான புத்தகம் மற்றும் திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் கடற்கரை கோவில் எம்பளத்துடன் கூடிய நினைவுப் பரிசு அடங்கிய பை வழங்கப்படுகிறது.