திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கல்லூரியில், விஜயஸ்ரீ என்ற இளம்பெண், முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆபேல் என்ற இளைஞருக்கும், பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஆனால், ஆபேல் ஏற்கனவே திருமணமாகியிருப்பதை மறைத்து, விஜயஸ்ரீ-யை காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்த காதல் விவகாரத்தை அறிந்த ஆபேலின் மனைவி வெண்ணிலா, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஜயஸ்ரீ, ஆபேல் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இவ்வாறு இருக்க, கடந்த 18-ஆம் தேதி அன்று, ஆபேல் உடன், விஜயஸ்ரீ செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், கடும் கோபம் அடைந்த வெண்ணிலா, விஜயஸ்ரீயுடன் தகராறு செய்துள்ளார். மேலும், அங்கு வந்த ஆபேலின் தாயாரும், வெண்ணிலாவின் தாயாரும், விஜயஸ்ரீ மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலன் இன்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வெண்ணிலா, அவரது தாயார், மாமியார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆபேலையும் தேடி வருகின்றனர்.