கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் செல்லும் சிறிய கால்வாயில் இருசக்கர வாகனம் ஒன்று கிடந்துள்ளது. வாகனத்தில் இருந்த ஆவணங்களைக் கொண்டு பார்த்த போது அது அருகில் உள்ள மாத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டிவந்தவர் வீட்டில் சாவகாசமாக உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் நண்பர்களிடம் விசாரிக்கப்பட்டது. அவர்கள் கூறுகையில் ; நேற்று மாலை அவர் மதுபோதையில் வந்துள்ளார். அப்போது வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் பாதியில் நின்றுவிட்டது. பெட்ரோல் போடுவதற்கு அவரிடம் பணம் இல்லை. இதனால், அவ்வழியாக வந்த சில நபர்களிடம் கடனாக பெட்ரோல் கேட்டுள்ளார்.
யாரும் உதவி செய்யாததால் தனது இருசக்கர வாகனத்தை கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.