சிதம்பரத்தில் தொடர் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது, திருட்டு நகைகளை உருக்கி வைத்திருந்த 45 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் இன்று காலை வாகன தணிக்கை செய்யும்போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட வாலிபர் சிதம்பரம் சின்ன கடை தெரு சேர்ந்த ராமமூர்த்தி மகன் வெங்கடேஷ்( 23) என்பவர் என்றும் இவர் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகள் திருடியது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்த ஜகபர்அலி வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடியதும், அதே போல் பள்ளிப்படை கலைவாணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடியதும், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு பெட்டிக்கடையில் அன்னாள் கஸ்பால் என்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சரடு திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சிதம்பரம் எஸ்.பி. கோயில் தெருவில் சாலையோரம் நின்றிருந்த மாலிக் பாஷா என்பவரது இருசக்கர வாகனத்தையும் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 45 பவுன் நகைகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மொத்தம் 20 லட்சம் என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.