கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹாவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும், ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்தில், 280-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்த விபத்தில், கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஜித் மாலிக் என்பவர் பாதிக்கப்பட்டு, உடல் அசைவற்று கிடந்துள்ளார். இதனை கண்ட மீட்புக் குழுவினர், அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து, சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, ரயில் விபத்து தொடர்பான செய்தியை அறிந்த மாலிக்கின் தந்தை, தனது மகனை காண்பதற்கு, ஆம்புலன்ஸில், விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு எங்கு தேடியும் தனது மகன் கிடைக்கவில்லை. இதையடுத்து, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால், அங்கும் தனது மகன் கிடைக்காததால், கடும் சோகத்தில் மூழ்கியுள்ளார். இறுதியில், மனமே இல்லாமல், சவக்கிடங்கில் தேடி பார்ப்பதற்கு சென்றுள்ளார்.
அங்கு, சவக்கிடங்கு பாதுகாவலர், இறந்தவர்களின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே, சவக்கிடங்கில் இருந்த ஒரே ஒரு உடலில் மட்டும் அசைவு தென்பட்டது. இதையடுத்து, அந்த உடலை பார்த்ததில், அது மாலிக் என்பதும், அவர் உயிருடன் தான் உள்ளார் என்பதும், தெரியவந்தது.
பின்னர், அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தற்போது, மாலிக் உயிருக்கு ஆபத்தில்லை என்ற நற்செய்தியை, அவரது தந்தையிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படியான உணர்ச்சி போராட்டம் மிக்க சம்பவம், தற்போது நடந்துள்ளது.
இதனை உணர்ச்சி போராட்டமாக ஒரு பக்கம் பார்ப்பதோடு, மீட்பு படையில் ஈடுபட்டவர்களின் கவனக்குறைவாகவும், கருத வேண்டும்.. இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “மீட்பு பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள், மருத்துவத்துறையை சாராதவர்களாக இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று பதில் அளித்தனர். இதேபோல், இன்னும் எத்தனை பேர் மாட்டியிருப்பார்கள் என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது.