திருச்செந்தூர் அருகே காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர் அருகே உள்ள N.முத்தையாபுரத்தை சேர்ந்த வனசந்தியாவும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக்கும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலிப்பது சந்தியாவின் வீட்டிற்கு தெரியவந்ததை சந்தியாவின் தந்தை கடுமையான வார்த்தைகளில், காதல் கீதலெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையில்லை என்று எச்சரித்துள்ளார். இதன் காரணமாக சந்தியா, கார்த்திக்கிடம் பேசாமல் தவிர்த்துவந்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்,சந்தியாவின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நுழைந்து பேசியுள்ளார்.
இதையடுத்து கார்த்திக் சந்தியாவிடம் பேசும்போது பேச்சுவார்த்தை முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆத்திரமடைந்த கார்த்திக் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை கர கரவென அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, பார்ததில் ரத்த வெள்ளத்தில் சந்தியா தரையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையே வீட்டிற்கு வந்த கார்த்திக் குற்ற உணர்ச்சியில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளான். கார்த்திக்கை அவரது வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.