கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ். ஓரினச் சேர்க்கையாளரான இவர், காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“நானும், குமார் என்பவரும், நட்பாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, என்னை ஒரு அறையில் வைத்து, தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார்.
பின்னர், இருவரும் கணவன்-மனைவி போல், ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். சில நாட்கள் கழித்து, என்னிடம் இருந்து ரூபாய் 3.5 லட்சம் பணத்தை, பெற்றிருந்தார். ஆனால், தற்போது என்னை கைவிட்ட அவர், என்னிடம் வாங்கிய பணத்தையும் தர மறுக்கிறார்.
இதுமட்டுமின்றி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், என்னை துன்புறுத்தியுள்ளார். இயல்பிலேயே, என்னிடம் இருந்து பெண்மையை பயன்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, அவர் ஏமாற்றிவிட்டார். என்னை போல், மற்ற பெண்களும், திருநங்கைகளும், ஏமாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதுமட்டுமின்றி, குமார் தன்னை திருமணம் செய்துக் கொண்டது, அவரது மனைவிக்கும் தெரியும் என்றும், இந்த சம்பவத்தில், அவரும் உடந்தையாக உள்ளார் என்றும், புகார் மனுவில் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராஜேஷ்-க்கு குமார் தாலி கட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.