ஓசூர் அருகே காணாமல் போன ரேஷன் கடையைக் கண்டுபிடித்துத் தரக்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில்: சித்தனப்பள்ளியில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டது. இக்கடையில் 120 ரேஷன்கார்டுதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்டத்தர வேண்டும் என மனு அளித்தோம்.
இதையடுத்து, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்தபோது ரேஷன் கடையைக் காணவில்லை. எனவே, காணாமல் போன ரேஷன் கடையைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டு முதமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அருகேயுள்ள சிறிய கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, சீரமைக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் மீண்டும் ரேஷன் கடையைச் செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.