நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் 557 நகரங்களில் ஒட்டுமொத்தமாக 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளும் தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் ஒன்றரை லட்சம் பேரும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

2024 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை நீட் நுழைவு தேர்வை இன்று நடத்துகிறது.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் அமைந்துள்ள பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது .

இதில் ஒட்டுமொத்தமாக 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளும் தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழக அரசு சார்பில் 128 பயிற்சி வகுப்புகள் மூலம் நடத்தப்பட்ட இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் பயின்ற 3,647 ஆண்கள் மற்றும் 9,094 பெண்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்கப்படும், அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது, ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் நெகட்டிவ் மதிப்பெண்ணாக குறைக்கப்படும்.

இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது. குறிப்பாக, முழு ஆடைகள் அணிந்தவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அரைக்கை ஆடைகள் தான் அணிய வேண்டும் என்றும், ஹீல்ஸ் கொண்ட செருப்பு அல்லது ஷுக்களுக்கு அனுமதி இல்லை என்றும், கைப்பைகள், பெல்ட், தொப்பி, பர்ஸ், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News