ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில், தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த மாதங்களில், பொதுவாக மிதமான அளவிலேயே மழையின் தாக்கம் இருக்கும்.
ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில், தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. ஆரம்பத்திலேயே வெளுத்து வாங்கிய மழையால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.
மேலும், கர்நாடகாவின் தலைநகரில், 111.1 மி.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், 1891- ஆம் ஆண்டு, ஜூன் 16-ஆம் தேதி அன்று, 101.6 மி.மீ அளவில் மழை பெய்திருந்தது.
இதன்மூலம், கடந்த 133 வருடங்களில், ஜூன் மாதத்தில், ஒரே நாளில், இந்த அளவுக்கு மழை பெய்ததே இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கையை அப்பகுதிக்கு விடுத்துள்ளது.
இதுமட்டுமின்றி, இன்றில் இருந்து 5-ஆம் தேதி வரை, வானம் மேக மூட்டத்துடனும், இடையிடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், அதிகபட்சமாக, 31-ல் இருந்து 32 செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 20-ல் இருந்து 21 செல்சியஸ் அளவிலும், வெப்பநிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.