Connect with us

Raj News Tamil

கிழிக்கப்பட்ட புனித நூல்.. அடித்தே கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்.. அரங்கேறிய கொடூர சம்பவம்!

இந்தியா

கிழிக்கப்பட்ட புனித நூல்.. அடித்தே கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்.. அரங்கேறிய கொடூர சம்பவம்!

பஞ்சாப் மாநிலம் தலிக்குலம் பகுதியை சேர்ந்தவர் லக்விந்தர் சிங். இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பக்ஷிஷ் சிங்குடன், சிகிச்சைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும், சீக்கியர்களின் புனித கோவிலான குருத்வாருக்கு சென்றுள்ளனர்.

அப்போது, சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த் சாகிப்பின் சில பக்கங்களை, பக்ஷிஷ் சிங் கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்து தப்பி முயன்ற அவரை, அங்கிருந்த சீக்கியர்கள் பிடித்து, கடுமையாக அடித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புனித நூலை அவமதித்ததற்காக, உயிரிழந்த பக்ஷிஷ் சிங் மீது, பிரிவு 295 A-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பக்ஷிஷ் சிங்கின் தந்தை, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது என்றும் கூறினார்.

மேலும், தனது மகன் மீது வழக்கு பதிவு செய்ததை போல, அவனை கொன்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, காவல்துறையிடம் அவர் கூறினார்.

இதற்கிடையே, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தை, சமூக ரீதியாகவும், மதம் ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த இளைஞரின் இறுதி சடங்கு, குருத்வாரின் எந்த இடத்திலும் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், சீக்கியர்களின் மத தலைவர் கூறியுள்ளார்.

சீக்கியர்களுக்கான சங்கத்தின் மூத்த தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசும்போது, “குரு கிராந்த் சாகிப்பை அவமதிக்கும் செயல் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. அரசின் சட்டங்கள், மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்களை தடுத்து நிறுத்துவதும் கிடையாது, அந்த குற்றவாளிகளை தண்டிப்பது கிடையாது. அதனால் தான், மக்களே அதற்கான நீதியை தங்களது வழியில் தேடிக் கொண்டனர்” என்று கூறினார்கள்.

மேலும், “ஸ்ரீ குரு கிராந்த் சாகிப்பை தாண்டி வேறு எதுவும் சீக்கியர்களுக்கு மேலானது கிடையாது. புனித நூல் அவமதிக்கப்பட்டிருப்பது சீக்கியர்கள் மனதை பாதித்துள்ளது.” என்று கூறினார்கள்.

More in இந்தியா

To Top