Connect with us

Raj News Tamil

ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? – உச்சநீதிமன்றம்!

இந்தியா

ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? – உச்சநீதிமன்றம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இதை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, திருக்கோவிலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது, “ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.

நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படுகிறாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையாக கேள்விகளை எழுப்பியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top