Connect with us

Raj News Tamil

Seat மாறி அமர சொன்ன பெண்.. வெச்சி செய்த இளைஞர்.. வைரல் பதிவு!

இந்தியா

Seat மாறி அமர சொன்ன பெண்.. வெச்சி செய்த இளைஞர்.. வைரல் பதிவு!

பேருந்து, ரயில், விமானம் என்று எந்த வகையிலான பயணமாவது இருந்தாலும், இதுமாதிரியான நபர்களை நாம் நிச்சயம் சந்தித்திருப்போம்.

“ப்ளீஸ் கொஞ்சம் வேறு சீட்-ல போய் உக்காருறீங்களா?. நாங்க குடும்பமா வந்திருக்கோம். ஒரே க்ரூப்பா இருந்துக்குறோம்” என்று கேட்பார்கள். நாம் ஆசை ஆசையாக இருக்கையை பிடித்தால், இவ்வாறு உதவி என்று கேட்டு சிலர் வருவதை, அனைவரும் ஒரு கட்டத்தில் அனுபவித்திருப்போம்.

இப்படியான சூழலை, இளைஞர் ஒருவர் வித்தியாசமாக அனுகி, பலரது மனங்களை வென்றுள்ளார். அதாவது, மகேஷ் என்ற இளைஞர், பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவருக்கு நடந்த அனுபவங்களை, எக்ஸ் தளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பெங்களூருக்கு விமானத்தில் சென்றபோது.. நாங்கள் குடும்பமாக ஒரே இடத்தில் இருந்துக் கொள்கிறோம். வேறொரு இருக்கையில் நீங்கள் அமர்ந்துக் கொள்கிறீர்களா? என்று என்னிடம் ஒரு பெண் கேட்டார்.

அதற்கு, கண்டிப்பாக மாற்றிக் கொள்கிறேன். எனக்கு பணத்தை Cash-ஆ தரீங்களா? G-Pay -ஆ என்று கேட்டேன். மேலும், நான் இந்த இருக்கைக்கு குறிப்பிடத்தக்க பணத்தை கொடுத்துள்ளேன் என்று கூறினேன்.

அந்த பெண் என்னை கோபமாக பார்த்தாள். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவங்க என்ன எதிர்பார்க்குறாங்க.. சொன்ன உடனே, சீட்-ல இருந்து எகிறி குதிக்கணுமா” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படியான சம்பவங்களில் நிறைய பேர் சிக்கியிருப்பதால், பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, பலரது கவனத்தை பெற்று, வைரலாகி வருகிறது.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “இவர்கள் என்னமோ கும்பமேளாவில் இருப்பது போலவும், விமானம் தரையிறங்கியதும், கூட்டத்தில் சிக்கி தொலைந்துவிடுவது போலவும், அப்புறம் குடும்ப பாடலை பாடி, 20 வருஷங்களுக்கு பிறகு தான், இணைவார்கள் போல நடிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

இவரைப் போல் இன்னொரு நெட்டிசன், “உங்களை போல இன்னும் சிலர் வேண்டும். அந்த இருக்கைக்கு நாம் நிறைய பணம் செலுத்தி வாங்கியிருப்போம். இருக்கை மாறி உட்கார கோரும்போது, நாம் பணம் வசூலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், 3-வது நெட்டிசன் ஒருவர், “தங்களுடைய வசதிக்காக, மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதேமாதிரியான சம்பவம் ஒன்றை, நான் ரயிலில் பயணம் செய்யும்போது அனுபவித்திருந்தேன்.

நான் இருக்கை மாற முடியாது என்று கூறியபோதும், என்னை அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். கடைசியில், அவர்கள் தங்களுடைய மொழியில், ஆபாசமாக என்னை திட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். மொழி தெரியாததால், என்ன திட்டினார்கள் என்று என்னால் அறிய முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

என்னதான் பலரும், மகேஷின் செயலை புகழ்ந்திருந்தாலும், ஒருசிலர் விமர்சனமும் செய்திருந்தனர். “முடியாது என்று நீங்கள் நேரடியாகவே சொல்லியிருக்கலாம். GPay -ஆ Cash-ஆ-னு நீங்க கேட்டதை, தவிர்த்திருக்கலாம்” என்று நெட்டிசன் ஒருவர் விமர்சித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு விதமான ரியாக்ஷன்களுக்கு மத்தியில், இந்த வீடியோ 3 லட்சம் பார்வையாளர்களை பெற்று, வைரலாக பரவி வருகிறது.

More in இந்தியா

To Top