Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பொதிகை தொகைக்காட்சியின் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தமிழகம்

பொதிகை தொகைக்காட்சியின் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

பொதிகை தொலைக்காட்சியின் பெயரை மாற்றும் மத்திய அரசின் தமிழ் விரோத முயற்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில்,

ஒன்றிய அரசாங்கத்தால் 1975ல் தொடங்கப்பட்ட சென்னை தொலைக்காட்சி நிலையம், தமிழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி, 2000 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், பல்வேறு மொழிகளில் இருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.

இந்த ‘பொதிகை’ என்ற பெயர், தமிழர் திருநாளாம் பொங்கல் முதல் மாற்றப்பட்டு ‘டிடி தமிழ்’ என அழைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அண்மையில் அறிவித்துள்ளார்.

கடந்த 23 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவந்த ‘பொதிகை’ என்பதை ‘டிடி தமிழ்’ என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பொதிகையின் பெயரை வெறுமனே டிடி தமிழ் என்று அறிவிப்பது எதற்காக?

அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராஷ்டிராவில் சஹயாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று தொலைக்காட்சிகளுக்கு பெயர்கள் வைக்கப்பட்டன.

‘பொதிகை’ பெயர் நீக்கம், இந்தப் பெயர்களையும் மாற்றுவதற்கான தொடக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அந்தந்த மாநில மக்களின் தனித்துவத்தை, உணர்வுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் போக்கு கைவிடப்பட வேண்டும்.

ஏற்கனவே, பொதிகை தொலைக்காட்சியில், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வுக்கு போதிய இடம் வழங்காமல், தமிழ் சார்ந்த தனித்துவமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல், இந்தியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தமிழில் மொழி மாற்றம் செய்து உள்ளீடற்ற ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதிகை என அழைக்கப்பட்டு வந்த தமிழ் அடையாளத்தையும் ஒன்றிய அரசு அழிக்க முயற்சிக்கிறது.

இந்த பெயர் மாற்ற முயற்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை கைவிட்டு தொடர்ந்து பொதிகை என்ற பெயரிலேயே அழைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையை கேட்டுக் கொள்கிறது.

More in தமிழகம்

To Top