Connect with us

Raj News Tamil

கனமழை பாதிப்புக்கு முழு காரணம் திமுக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி!

தமிழகம்

கனமழை பாதிப்புக்கு முழு காரணம் திமுக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி!

கனமழை பாதிப்புக்கு முழு காரணம் திமுக அரசு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்கும் முன்பு மண்டலம் தோறும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழைநீர் தேங்கவில்லை. தேங்கிய நீரையும் உடனடியாக அப்புறப்படுத்தினோம். ஆனால் தற்போது மழை முடிந்த பிறகு ராட்சத மோட்டார்களை கேட்டிருப்பதாக தலைமைச் செயலர் கூறுகிறார். இதன்மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த காலங்களில் பேரிடரின்போது ஒன்றிரண்டு நாட்களில், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்கினோம். ஆனால் தற்போதும் நிறைய இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. அரசின் அலட்சியம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை பாதிப்புக்கு முழு காரணம் திமுக அரசு.

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். மத்திய அரசு தற்போது கொடுத்த நிதியையாவது முறையாகப் பயன்படுத்த வேண்டும். நாங்கள் அரசியல் பேசவில்லை. மக்கள் பிரச்சினையை பேசவே எதிர்க்கட்சி இருக்கிறது. எங்கள் கடமையைச் செய்கிறோம்.ஆளுங்கட்சி கடமையில் தவறியதை கோடிட்டு காட்டுகிறோம். அவர்கள் சொன்னது உண்மைதான். ஒரு சொட்டு நீர் நிற்கவில்லை. குளம்போல் நீர் தேங்கியுள்ளது. அதிமுக தலைமையகத்தில் கூட இரண்டடி அளவில் நீர் நிற்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனர்.

மக்களுக்கு கொடுக்கும் அனைத்து தகவல்களும் பொய்தான். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது மழைநீர் வடிகால் திட்டம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டெண்டரில் முறைகேடு காரணமாக பணிகள் முடியவில்லை. திட்டத்தை சரியாக நிறைவேற்றியிருந்தால் மழைநீர் தேங்கியிருக்காது. எனவே, மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பான விவரத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

உயிர்சேதத்தை பொருத்தவரை வேளச்சேரியில் சிக்கியவர்களின் உடலை 5 நாட்கள் கழித்து மீட்டிருக்கின்றனர். சாதாரண மக்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இது அரசின் அவலங்கள். அரசு மெத்தனமாக செயல்படுகிறது. தற்போது, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டச் செயலாளர்களை அழைத்து நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். நீர் அகற்றிய இடத்தில் தொற்றுநோய் பரவாமல் கவனிக்கவும், மருத்துவ முகாம்களை நடத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்களிடம் அரசு இயந்திரம் உள்ளது. ஆனால் எங்களது சொந்த பணத்தில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்குகிறோம். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை அதிமுக செய்யும். மநீம தலைவர் கமல்ஹாசனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top