இந்தியாவின் மிகவும் பிரபலமான மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக இருப்பது, MDH மற்றும் எவரெஸ்ட் தான். இந்த நிறுவனங்களின் சில மசாலா பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எத்திலைன் ஆக்சைடு இருப்பதாக, ஹாங் காங்கின் உணவு பாதுகாப்பு அமைப்பு கூறியிருந்தது.
இந்த மாசால பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனை சாப்பிட வேண்டாம் என்றும், அந்த அமைப்பு கூறியிருந்தது. இந்த தகவல், இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், இந்நிறுவனங்களின் மசாலா பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், MDH-ன் மெட்ராஸ் கறி தூள், சாம்பார் மசாலா கலந்த தூள், கறி தூள் கலந்த மசாலா தூள், எவரெஸ்ட்டின் மீன் கறி மசாலா உள்ளிட்ட மசாலா பொருட்களும், வேறு நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட மாதிரிகளும், அங்கீகரிக்கப்பட்ட லேப்களில் பரிசோதிக்கப்பட்டது.
இதில், எத்திலைன் ஆக்சைடு, பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் தடையங்கள் உள்ளதா என்று பல்வேறு பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை கிடைக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, FSSAI-யின் அறிவியல் குழு சரிபார்த்துள்ளது.
அவ்வாறு சரிபார்த்ததில், MDH மற்றும் எவரெஸ்ட் பிராண்டுகளின் மசாலா பொருட்களில், எத்திலைன் ஆக்சைடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று கூறியுள்ளது. மேலும், மற்ற 300 பொருட்களின் மாதிரிகளிலும், இந்த கெமிக்கல்கள் இருப்பதற்கான தடயங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
CSMCRI ( குஜராத் ) , இந்திய மசாலா பொருட்கள் ஆய்வு கழகம் ( கேரளா ) , NIFTEM ( ஹரியானா ) , BARC ( மும்பை ) , CMPAP ( லக்னோ ) , DRDO ( அஸ்ஸாம் ) , ICAR, தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம் ( புனே) ஆகிய அமைப்புகளின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் தான், FSSAI-யின் அறிவியல் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.