அந்நிய செலவாணி இருப்பு குறைந்திருப்பதாலும், இன்ன பிற பொருளாதார காரணங்களாலும், இலங்கை பெரும் பஞ்சம் நிலவி வருகிறது. பெட்ரோல், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பலரும், இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களை வீட்டிலேயே இருப்பு வைத்து வருகின்றனர்.
பால் போன்ற பொருட்களை இருப்பு வைத்தால், பிரச்சனைகள் ஏற்படாது. ஆனால், பெட்ரோல் போன்ற பொருட்களை, வீட்டிலேயே வைப்பதால், பல்வேறு ஆபத்துகள் நிறைந்துள்ளது. இதுபோன்ற தவறை செய்துள்ள தம்பதிகள், தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம், இலங்கையின் வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். 30 வயதாகும் இவருக்கு, கிருசாந்தினி என்ற மனைவி உள்ளார். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதால், கட்டிலின் கீழ் பெட்ரோலை சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டின் உள்ளே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, தம்பதியினர் இருவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.