Connect with us

Raj News Tamil

ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார்!

தமிழகம்

ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார்!

மதிமுகவை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேச மூர்த்தி இன்று காலை காலமானார்.

வைகோவின் தீவிர விசுவாசியாகவும், வலது கரமாகவும் அறியப்பட்டவர் கணேச மூர்த்தி திமுகவிலிருந்து பிரிந்து வைகோ தனியாக கட்சி தொடங்கிய போது அவருடன் 9 மாவட்டச் செயலாளர்கள் திமுகவிலிருந்து விலகினர். அவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி.

மதிமுகவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவரும் ஒருவர், மதிமுகவை உருவாக்கியவர்களில் பலர் வெவ்வேறு சூழ்நிலைகளில் வைகோவை விட்டு, மதிமுகவை விட்டு பிரிந்து சென்ற நிலையில் இறுதி வரை வைகோவுக்கு தோள் கொடுத்தவர் கணேசமூர்த்தி.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கொடுக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கணேச மூர்த்திக்கு தான் வைகோ கொடுத்தார். அவரும் ஈரோடும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி வந்தார். 2024 மக்களவைத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரு மக்களவை இடம் ஒதுக்கியது திமுக.

இந்த இடத்தில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து அதிக மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்பட்டது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கணேசமூர்த்தி ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேரமாக வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 5.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நலத்தை வைகோ, துரை வைகோ உள்ளிட்ட மதிமுக தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அப்போதே 50 சதவீதம் தான் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கணேசமூர்த்தியின் இறப்பைத் தொடர்ந்து மருத்துவ அறிக்கை வெளிவந்த பின்னரே இறப்பிற்கான முழு காரணம் தெரிய வரும்.

தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு போலீசார் வந்த பின்பு உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் கணேசமூர்த்தியின் உடல் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top