Connect with us

Raj News Tamil

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும்-சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.

ஏறத்தாழ 127 நாட்கள் பயணம் செய்து தற்போது எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக அடைந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.

இந்த நிலையில் விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது.

மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். நாட்டு மக்களுடன் இணைந்து நானும் இந்த அசாதாரண சாதனையை பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம்” என்று தெரிவித்து உள்ளார்.

More in இந்தியா

To Top