Connect with us

Raj News Tamil

விவிபாட் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

இந்தியா

விவிபாட் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தச் சூழலில் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. கடந்த 18-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப்.26) அளிக்கப்பட்டது.

தீர்ப்பின் போது, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலாம்.

பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகளை, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னரும் குறைந்தது 45 நாள்களுக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டண செலுத்த வேண்டும் என்றும் இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயத்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடிந்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையிலியே சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும். முன்னதாக உள்ள நடைமுறைப்படி 5% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top