அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், இந்தியா தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்தின் முன்பு குவிந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் முற்றிய நிலையில், தூதரக கட்டிடத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.