Connect with us

Raj News Tamil

ஜி20 – உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னை இணையவழி குற்றம்: பிரதமா் மோடி!

இந்தியா

ஜி20 – உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னை இணையவழி குற்றம்: பிரதமா் மோடி!

உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னைகள் இணையவழி குற்றச் செயல்களும் கிரிப்டோகரன்சிகளும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பேசினார்.

டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. ‘ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பிலான 3-ஆவது மற்றும் இறுதி அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாறாமல் இருக்கும் எதுவும் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்பதே இயற்கை விதி. உலகம் எதிர்கொண்டு வரும் புதிய எதாா்த்த சூழலை எதிரொலிக்கும் வகையில் பன்னாட்டு அமைப்புகள் திகழ வேண்டும். புதிய சவால்களுக்குத் தீா்வு காணும் வகையிலும் எதிர்காலத்தை நோக்கியும் உலக நாடுகளைப் பன்னாட்டு அமைப்புகள் வழிநடத்த வேண்டும்.

ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டபோது உலகின் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. 51 நாடுகளுடன் ஐ.நா. தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ஐ.நா. உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை தற்போது 200-ஐ நெருங்கியுள்ளது. அப்படியிருந்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கை மாறவில்லை.

பல்வேறு விவகாரங்களில் சா்வதேச சூழல் மாறிவிட்டது. போக்குவரத்து, தொலைத்தொடா்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரும் மாற்றம் கண்டுள்ளன. ஆனால், அத்தகைய மாற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் தற்போது பிரதிபலிக்கவில்லை. நவீன உலகின் கட்டமைப்புகளைப் பன்னாட்டு அமைப்புகள் பிரதிபலிக்க வேண்டியது அவசியம்.

கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு பிராந்திய அமைப்புகள் தோன்றி வருகின்றன. அவை சா்வதேச சூழலை சிறந்த முறையில் பிரதிபலிப்பதோடு, திறம்படவும் செயல்பட்டு வருகின்றன. மாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைத்துக் கொள்ளப்பட்டது.

பன்னாட்டு அமைப்புகளில் காலத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோல், பன்னாட்டு வளா்ச்சி வங்கிகளின் செயல்பாடுகளிலும் சீா்திருத்தங்கள் புகுத்தப்பட வேண்டும். அத்தகைய சீா்திருத்தங்கள் உடனடியாகவும் திறம்படவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னைகள் இணையவழி குற்றச் செயல்களும் கிரிப்டோகரன்சிகளும் ஆகும். அந்தப் பிரச்னைகள் உலகின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பாதிக்கவல்ல ஆற்றல் மிக்கவை. சமூக அமைப்பு, நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு கிரிப்டோகரன்சி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சா்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதற்கு இணையம் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தடுப்பதற்கும் இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சா்வதேச ஒத்துழைப்பு அவசியம். ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பையும் வளா்ச்சியையும் உறுதி செய்வதற்கு இணையவழிப் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பு குறித்தும் மற்ற நாடுகள் சிந்திக்கத் தொடங்கும்போது ‘ஒரே எதிர்காலம்’ என்ற சிந்தனை வலுப்படும். நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சி அபரிமிதமாகவும் கற்பனைக்கு எட்டாத வகையிலும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் சார்ந்த விவகாரங்களில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

‘மக்களை மையப்படுத்திய பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு நிர்வாகம்’ என்ற திட்டம் முன்மொழியப்படுகிறது. அத்திட்டத்தின் கீழ் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கும், முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

கண்ணோட்டத்தில் மாற்றம்: மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) மையமாகக் கொண்ட கண்ணோட்டத்தில் இருந்து மக்களை மையப்படுத்திய கண்ணோட்டத்துக்கு உலக நாடுகள் மாற வேண்டும். நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் கிடைத்த தரவுகளை மனித சமூகத்தின் நலனுக்காக மற்ற நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

மக்களை மையப்படுத்திய வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவின் கொள்கையையும் இது வெளிக்காட்டுகிறது. வேகமாக மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப, மாற்றங்களுடன் நிலைத்தன்மையும் நீடித்த வளா்ச்சியும் அவசியம் என்றார் பிரதமா் மோடி.

More in இந்தியா

To Top