Connect with us

Raj News Tamil

மக்களை மையப்படுத்திய வளா்ச்சிப் பாதையில் உலக நாடுகள் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்: பிரதமா் மோடி!

இந்தியா

மக்களை மையப்படுத்திய வளா்ச்சிப் பாதையில் உலக நாடுகள் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்: பிரதமா் மோடி!

மக்களை மையப்படுத்திய வளா்ச்சிப் பாதையில் உலக நாடுகள் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஜி20 கூட்டமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘ஒரே பூமி’ என்ற அமா்வில் பிரதமா் மோடி கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டானது உலகத்துக்குப் புதிய வழியைக் காட்டி வருகிறது. சா்வதேச நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு உலக நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. சில நாடுகளுக்கு இடையேயான போர், அந்த நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்துவிட்டது.

கரோனா தொற்றையே நாம் ஒழித்துவிட்டோம். அப்படியிருக்கையில், இத்தகைய நம்பிக்கையில்லாத சூழலையும் நம்மால் எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலக நாடுகள் தங்களுக்கு இடையேயான நம்பிக்கையில்லாத சூழலை நம்பிக்கையும் உறுதிப்பாடும் நிறைந்த சூழலாக மாற்ற வேண்டுமென ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து இந்தியா வலியுறுத்துகிறது.

பல ஆண்டு காலமாக உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீா்வு காண வேண்டிய சூழலில், ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அடையாளமாக இந்தியாவின் ஜி20 தலைமை திகழ்ந்தது.

இந்தியாவின் ஜி20 கூட்டங்களானது மக்களை மையப்படுத்தியதாக அமைந்தது. நாட்டின் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களை மையப்படுத்திய வளா்ச்சிப் பாதையில் உலக நாடுகள் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். தங்களுக்கான பொறுப்புகளை உணா்ந்து நாடுகள் செயல்பட வேண்டும்.

சா்வதேச பொருளாதார வளா்ச்சி, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உர விநியோகம், பயங்கரவாத ஒழிப்பு, இணையவழிக் குற்றங்கள் தடுப்பு, சுகாதாரம், நீா்ப் பாதுகாப்பு உள்ளிட்ட பலவகையான சவால்களுக்கும் ஒருங்கிணைந்து தீா்வு காண வேண்டியது அவசியம் என்றார் பிரதமா் மோடி.

More in இந்தியா

To Top