Connect with us

Raj News Tamil

மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகக்கூட பிரதமர் கருதவில்லை: ராகுல் காந்தி!

அரசியல்

மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகக்கூட பிரதமர் கருதவில்லை: ராகுல் காந்தி!

பிரதமர் மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை. மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகக்கூட பிரதமர் கருதவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நேற்று விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

வன்முறை நிகழ்ந்த மணிப்பூருக்கு சில தினங்களுக்கு முன்பு நான் சென்றிருந்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும், பெண்களையும் சந்தித்தேன். ஆனால், பிரதமா் அங்கு இதுவரை செல்லவில்லை. மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகக்கூட பிரதமா் கருதவில்லை.

நான் அந்த மாநிலத்தை இங்கு மணிப்பூா் என்று குறிப்பிடுகிறேன். ஆனால், உண்மையில் அங்கு தற்போது மணிப்பூரே இல்லை. மணிப்பூரை இரு பிரிவுகளாக நீங்கள் பிரித்திருக்கிறீா்கள்.

மணிப்பூா் நிவாரண முகாமில் சந்தித்த ஒரு பெண்ணிடம் என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது, அவருடைய கண் முன்னே அவருடைய ஒரே மகனை வன்முறையாளா்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறினார். இரவு முழுவதும் மகனின் உடலுடன் இருந்துள்ளார். பின்னா், பயம் ஏற்பட்டதால், வீட்டைவிட்டு வெளியேறி முகாமுக்கு வந்துள்ளார். ‘வீட்டிலிருந்து எந்தவித பொருள்களும் எடுத்துவரவில்லை. அணிந்திருந்த உடையுடன் வந்துவிட்டேன்’ என்றும் அவா் குறிப்பிட்டார்.

இதுபோல் மற்றொரு முகாமில் சந்தித்த பெண்ணிடமும் இதே கேள்வியை எழுப்பினேன். அப்போது நடுக்கத்துடன் பதில் கூறவந்த அந்தப் பெண் அச்சத்தில் மயங்கிவிட்டார். இவை, மணிப்பூா் நிலவரத்தின் இரு உதாரணங்கள் மட்டுமே.

மணிப்பூரில் ராணுவத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், அரசு ராணுவத்தை அங்கு அனுப்பவில்லை. ராணுவத்தை அனுப்பியிருந்தால் ஒரே நாளில் பிரச்னைக்கு தீா்வு கண்டிருக்கலாம்.

எப்படி ராவணன் இருவரின் அறிவுரையை மட்டும் கேட்டாரோ அதுபோல, பிரதமா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தொழிலதிபா் கெளதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை மட்டுமே கேட்டு நடக்கிறார்’ என்றார்.

More in அரசியல்

To Top