Connect with us

Raj News Tamil

விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் கண்டறிய வேண்டும்: அண்ணாமலை!

அரசியல்

விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் கண்டறிய வேண்டும்: அண்ணாமலை!

விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிஐஜி விஜயகுமார் தற்பொழுது நம்முடன் இல்லை என்ற செய்தி அனைவரும் மத்தியிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன் என்று நினைக்கின்ற போது எனக்கு துக்கம் என்பது இன்னும் அதிகமாக உள்ளது. விஜயகுமார் மீது பாஜகவினர், இப்பகுதி மக்கள், மாற்றுக் கட்சியினர் என அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக அவர் பணிபுரிந்துள்ளார் என பலரும் கூறுகிறார்கள். தற்பொழுது வேறு மாநிலங்களில் நடப்பது தற்பொழுது தமிழகத்திற்குள்ளும் நடக்க துவங்கி உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பொதுப்படையான காரணங்களை நாங்கள் முன் வைக்கிறோம், காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும். காவல்துறையினரின் மன அழுத்தத்தை முதலில் குறைக்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறையில் தற்போது பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. அதனை நிரப்பி விட்டாலே தற்பொழுது உள்ள காவலர்களுக்கான பணி அழுத்தம் என்பது குறையும். எனவே முதல்வர் போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் மொத்தமாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தீர்ப்பாக அளித்துள்ளதை தமிழக அரசு குழு அமைத்து அதனை மேம்படுத்த வேண்டும். இரண்டு வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கக் கூடாது, காவலர்கள் பணி செய்யும் இடங்களில் அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள், கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கட்டாயமாக வார விடுமுறை ஒரு நாள் அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் நான் பணி புரியும் பொழுது இதனை கட்டாயமாக பின்பற்றுவோம். மேலும் காவல்துறையில் இருப்பவர்களுக்கு பிளாக் லீவு வழங்கப்பட வேண்டும்.

நான் காவல்துறையில் பணியில் இருந்த பொழுது 9 ஆண்டுகளில் 20 நாட்களுக்கும் குறைவாகத்தான் லீவு எடுத்துள்ளேன். தமிழக காவல்துறைக்கு நற்பெயர் வருவதற்கு 10,000 கோடியை செலவு செய்தாலும் பரவாயில்லை. டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிறப்புக் குழு அமைத்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். விஜயகுமாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நடந்த உரையாடல் என்ன அதற்கு முன்பு எந்தெந்த அதிகாரிகளுடன் பேசியிருந்தார். எதுபோன்ற வழக்குகளை இவர் விசாரித்து வந்தார், டிஜிபியில் இருந்து அவருக்கும் இவருக்கும் இருந்த உரையாடல் என்ன? மன அழுத்தத்திற்கான காரணம் என்ன? என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

உயர் அதிகாரிகள் பேசும் பொழுது கவனம் இருக்க வேண்டும், குடும்பத்தினரின் தனி உரிமை பாதிக்காதவாறு அதிகாரிகள் பேச வேண்டும். இறந்த குடும்பத்தின் வாரிசுக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும். கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் இவருடைய தற்கொலை சம்பவம் நடந்துள்ளது எதையும் தொடர்பு செய்து நாங்கள் பேசவில்லை. விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஏனென்றால் தற்கொலை செய்யும் மன அளவில் எந்த அதிகாரியும் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வர மாட்டார். ஆனால் அதையும் தாண்டி இதனுள் இருக்கின்ற காரணம் என்ன என்று தெரிய வேண்டும் எனத் தெரிவித்தார்.

More in அரசியல்

To Top