Connect with us

Raj News Tamil

உலகக்கோப்பை: 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

விளையாட்டு

உலகக்கோப்பை: 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேட்பன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இயக்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

நிதானமாக விளையாடிய விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 50-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசிய நிலையில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் கே.எல்.ராகுல் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசினார்.

சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஷுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். ஆனால் அவர், மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். 66 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 398 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இதில் ஷமி பந்துவீச்சில் கான்வே 13 மற்றும் ரச்சின் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்க கேன் வில்லியம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வில்லியம்சன் 69 ரன்களுடன் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 119 பந்துகளை எதிர்கொண்டு 134 ரன்கள் குவித்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

கிளென் பிலிப்ஸ் மட்டும் 41 ரன்கள் சேர்க்க, எஞ்சிய வீரர்களின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. இறுதியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்த ஆட்டத்தில் ஷமி மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

More in விளையாட்டு

To Top