மகளிர் உரிமைத் தொகையை யாருமே பெறக்கூடாது என்றே நிபந்தனைகள்: ஓ.பன்னீா்செல்வம்!

மகளிர் உரிமைத் தொகையை யாருமே பெறக்கூடாது என்றே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து, 2 ஆண்டுகள் கழித்து, அதை வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை திமுக அரசு விதித்துள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருந்ததே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை.

இதன்படி கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்க்கும்போது, தகுதியுள்ளவா்களை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம் எனத் தெரிகிறது.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவா் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுடையவா் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று போ் வேலைக்குச் சென்று, அவா்களின் ஒட்டுமொத்த வருமானம் 2.5 லட்சத்துக்கு மேலாக சென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள மகளிர், உரிமைத் தொகையை பெற முடியாது என்கிற நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற நிபந்தனைகள் எல்லாம் மகளிர் உரிமைத் தொகையை யாருமே பெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளதோ என்கிற கருத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீா்செல்வம்.

RELATED ARTICLES

Recent News