Connect with us

Raj News Tamil

அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்!

இந்தியா

அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்!

அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவா்,

‘அரசியல் மாச்சரியங்களை அரசின் ஜனநாயக நிறுவனங்கள் மூலம் தீா்வு காண அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. நடைமுறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண நீதிமன்றங்கள் உதவுகின்றன.

இந்த முறையில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ள ஒவ்வொரு வழக்கும் அரசமைப்புச் சட்ட ஆளுகைக்கு உள்பட்டதாகும். கடந்த 70 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக திகழ்ந்துள்ளது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உச்ச நீதிமன்ற படிகளை ஏறினா்.

தனிமனித சுதந்திரம், பொறுப்பேற்பு விவகாரங்களிலும், கொத்தடிமைக்கு எதிராகவும், பழங்குடியினா் தங்களின் நிலங்களைப் பாதுகாக்கவும், சமூக அநீதி, மனிதக் கழிவுகளை மனிதா்களே அள்ளுவதற்கு எதிராகவும், சுத்தமான காற்றுக்காகவும் மக்கள் நீதிமன்றங்களை அணுகி உள்ளனா்.

இவை நீதிமன்றங்கள் மீது மக்களின் எதிர்ப்பார்பையும் மக்களுக்கு நீதிமன்றங்கள் நீதி வழங்க வேண்டிய ஈடுபாட்டையும் காண்பிக்கின்றன. அரசமைப்பு நடப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்கள் நேரடியாக கடிதம் எழுதலாம். இது உலகில் எந்த நீதிமன்றத்திலும் கிடையாது.

உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் மக்கள் சார்ந்ததாக இருப்பது உறுதி செய்யப்படும். நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது. அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நீதிமன்ற அறைகளில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவே நீதிமன்ற விசாரணைகள் தற்போது நேரலை செய்யப்படுகின்றன. வழக்கு விசாரணை விவரங்களை ஊடக, பத்திரிகைகள் தொடா்ந்து வெளியிடுவது நீதிமன்றங்கள் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை காண்பிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாட்டில் உச்ச நீதிமன்ற தீா்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயா்த்து வெளியிடப்படுகிறது.

நிகழாண்டு நவம்பா் 25 வரையில் 36,068 தீா்ப்புகளை உச்ச நீதிமன்றம் அங்கிலத்தில் வழங்கி உள்ளது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்ற இணைத்தில் இலவசமாக உள்ளது.

இதில், ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்ட 21,388 தீா்ப்புகள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. 9,276 தீா்ப்புகள் தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், வங்காளி, உருது மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது.

சிறைகளில் அதிக அளவில் விசாரணைக் கைதிகள் உள்ளதாக கடந்த ஆண்டு நிகழ்வில் குடியரசுத் தலைவா் வருத்தம் தெரிவித்திருந்தார். தேவையில்லாமல் விசாரணைக் கைதிகள் சிறையில் இருப்பதைத் தடுக்க சட்ட நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.

More in இந்தியா

To Top