Connect with us

Raj News Tamil

சிறுமியை எரித்துக்கொன்ற வழக்கில் அதிமுக நிர்வாகி 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகம்

சிறுமியை எரித்துக்கொன்ற வழக்கில் அதிமுக நிர்வாகி 2 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(15). ஜெயபால், அதே பகுதியில், தான் வசிக்கும் வீட்டுடன் ஒரு பெட்டிக்கடையும் மற்றும் சிறுமதுரை பிரதான சாலையில் மற்றொரு பெட்டிக்கடையும் வைத்து நடத்தி வருகிறார்.

இதில் சிறுமதுரை பிரதான சாலையோரம் உள்ள பெட்டிக்கடை அருகில் இளையபெருமாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை ஜெயபால் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்துள்ளார்.

அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகையன்(57), அதிமுக கிளை செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள்(58) ஆகியோர் சேர்ந்து, தாங்கள் பயிர் வைக்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர் இளையபெருமாளிடம் முறையிட்டுள்ளனர். மேலும், அந்த நிலத்தில் குப்பைகளை கொட்டி பயிர்களை நாசம் செய்து வந்துள்ளனர். இதனால் ஜெயபால் தரப்பினருக்கும் முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே கடந்த 2013ஆம் ஆண்டில் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த பெட்டிக்கடை வழியாக முருகன், கலியபெருமாள் ஆகியோர் செல்லும்போது, அவர்களை ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ தகாத வார்த்தையால் திட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், ஜெயஸ்ரீயை கொன்று விடலாம் என்று சதித்திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த 9.5.2020 அன்று இரவு முருகனின் உறவினர் பிரவீன்குமார் என்பவர், ஜெயபாலின் வீட்டுடன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சென்று, பீடி கேட்பதுபோல் கேட்டு, தகராறு செய்துள்ளார்.

அதைத் தட்டிக்கேட்ட ஜெயஸ்ரீயின் அண்ணன் ஜெயராஜ், தந்தை ஜெயபால் ஆகிய இருவரையும் பிரவீன்குமார் தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மறுநாள் (10.5.2020) காலை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றனர்.

அப்போது, காலை 11 மணியளவில், அந்த பெட்டிக்கடையில் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து முன்விரோதத்தை மனதில்கொண்டு, அக்கடைக்கு சென்று அங்கிருந்த ஜெயஸ்ரீயின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் ஜெயஸ்ரீ மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி மறுநாள் (11.5.2020) அன்று ஜெயஸ்ரீ இறந்தார்.

இதுகுறித்து, அவரது தந்தை ஜெயபால், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அதிமுக நிர்வாகிகள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரின் மீதும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top